லண்டன்: ""இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் கறுப்புப்பண புழக்கம் அதிகரித்துள்ளது. இது கவலை தரும் அம்சம். தேர்தல்களில் கறுப்புப்பண புழக்கம் மேலோங்கி இருப்பதால், தேர்தல் செலவுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டம் பலன் தராது,'' என, இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், லண்டனில் நடைபெற்றது. இதில், இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி பேசியதாவது: தேர்தல்களில் ஆள் பலத்தை பயன்படுத்துவது வரலாறு ஆகிவிட்டது. அதே நேரத்தில், பண பலமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்துள்ளது. இது கவலை தரும் விஷயம். இந்த சூழ்நிலையில், தேர்தலின் போது, அரசியல் கட்சிகளின் செலவுக்கு அரசே பணம் வழங்கும் அல்லது நிதி உதவி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில், எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி அமல்படுத்தினால், அதனால், பெரிய அளவில் பலன் கிடைக்காது. அதை மீறி, இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டால், தலைமைத் தேர்தல் கமிஷன் எதிர்க்காது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கு அரசே பணம் வழங்கினாலும், தேர்தலில் கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை செலவழிக்கத் தான் செய்வர். வாக்காளர்களை கட்டாயப்படுத்தி ஓட்டளிக்க வைப்பதை நான் எதிர்க்கிறேன். வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் எனக் கூறுவது சரியாக இருக்காது. அதற்கு மாறாக, மக்களை தானாக முன்வந்து ஓட்டளிக்கச் செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்கம், தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தல்களின் போது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதனால், இந்த மாநிலங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் 80 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்தது. பீகார் மாநிலத்தில் முன்னர் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது, பல கொலைகள் அரங்கேறின. கடந்தாண்டில் நடந்த தேர்தலில், ஒரு சொட்டு ரத்தக் கறை கூட ஏற்படவில்லை. அந்தளவிற்கு வன்முறையற்ற தேர்தல் நடந்தது. இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பல்வேறு நாட்டினரும் பாராட்டி, கேட்டு அறிந்து வருகின்றனர். மற்ற நாடுகளுக்கு, இந்திய தேர்தல் நடைமுறையை கற்றுக் கொடுக்க, "சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல்' என்ற பெயரில் நிறுவனம் துவக்கப்பட்டு, முதன் முதலாக, கென்யா நாட்டினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குரேஷி கூறினார்.
பிரிட்டன் தேர்தல் கமிஷன் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் வார்டில் பேசுகையில், ""இந்திய தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. அதன் திறமையான தேர்தல் பணிகளை, காமன்வெல்த் நாடுகளும் அங்கீகரித்துள்ளன,'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்
சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:
கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கோகுலஇந்திராவுக்கு சுற்றுலா துறையும், ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெ., உத்தரவின்படி கவர்னர் மாளிகை வட்டாரம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
சட்ட அமைச்சர் பதவி நீக்கம்: கடையநல்லூர் தொகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை பொறுப்பேற்பார் என்றும், சட்ட அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையா நீக்கப்பட்டு , செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருக்கும் செந்தமிழன், சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசக்கிசுப்பையாவும் சர்ச்சைகளும்..., : சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் இசக்கிசுப்பையா. இவரது தந்தை இசக்கி,தென்காசியை அடுத்துள்ளஆயிரப்பேரியை சேர்ந்தவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு சொந்தமான நிலபுலன்களை கவனித்துக்கொண்டதால் அவரது குடும்பத்துடன் நெருக்கம். அந்த வகையில் சிவாஜிகணேசனின் பேரனை கதாநாயகனாக்கிஇசக்கி குடும்பத்தினர், வெற்றி பெறாத "சக்சஸ்' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டனர். கட்சியில்எந்த போராட்டங்களுக்கோ, கட்சியினருடன் அதிகம் பரிட்சயமோ இல்லாத சுப்பையாவிற்கு எம்.எல்.ஏ.,அமைச்சர் என அடுத்தடுத்த பதவிகள் தரப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
இருப்பினும் கடந்த ஒன்றரை மாத காலமாக எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாமல் தவிர்த்தார். நெல்லையில் டாஸ்மாக் கடைகளை அ.தி.மு.க.,வினருக்கு டெண்டர் கொடுத்த விதத்தில் சிக்கிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் இவர் தப்பித்துக்கொண்டார். சென்னையில் நில பிரச்னைதொடர்பாக எழுந்த புகாரின் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிலும் தங்கள் நிலையை விளக்கியிருந்தார். இருப்பினும் சுப்பையா, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுகட்சியினரிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.
குற்றால சாரல் விழா போச்சுதே: குற்றாலத்தில் ஸ்டார் ஓட்டல் நடத்தி வரும் இசக்கிசுப்பையா, இந்த சாரல்விழாவில் அமைச்சராக பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சாரல் விழாவிற்கு முன்பாகவே பதவி பறிக்கப்பட்டுள்ளது.தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன், கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர்.அதிர்ந்துபேசாத முதியவர் என்ற பண்புகள் உள்ளன. அண்மையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகபொறுப்பேற்ற செந்தூர்பாண்டியன், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் பத்துக்கும் மேற்பட்ட கார்களுடன் அடைத்துக்கொண்டு சென்றது கட்சியினர், போலீசாரை முகம்சுளிக்க வைத்தது. எனவே அத்தகைய சர்ச்சைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது செந்தூர் பாண்டியனின் கடமையாகும்.